பாஜகவை மறைமுகமாக சாடிய நிதின் கட்கரி: பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது எல்லாம் ரொம்ப தப்புங்க..

பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, அவ்வப்போது தனது சொந்த கட்சியான பாஜகவை சாடும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவதை கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், இப்போது அரசியல் என்பதே அதிகாரத்தைப் பிடிப்பதாக இருப்பதாகவும் இதனால் அரசியலில் இருந்து விலக நினைத்ததாகவும் குறிப்பிட்டார். முன்னதாக கடந்த வாரம் தான், 2024 தேசியத் தேர்தல் உட்பட தேர்தலுக்கான திட்டங்களை முடிவு செய்யும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து முன்னாள் பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிதின் கட்கரி இந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு நாக்பூரில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த ஒரு மனிதனும் தோற்கடிக்கப்பட்டால் அத்துடன் அவன் வாழ்வு முடிவதில்லை, ஆனால் அதை ஒப்புக்கொண்டு வெளியேறும் போது தான் அவன் வாழ்க்கை உண்மையில் தோல்வி அடையும் என மறைமுகமாக நிதின் கட்கரி பாஜகவை சாடியுள்ளார்.

இது தொடர்பாக நிதின் கட்கரி பேசுகையில், ‘தொழில், மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணி, அரசியல் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மனித உறவுகளே மிகப்பெரிய பலம். எந்தவொரு நபரையும் பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது சரியான நடைமுறை இல்லை. நல்ல நாட்களாக இருந்தாலும் சரி, மோசமான நாட்களாக இருந்தாலும் சரி, உங்களுடன் இருக்கும் நபர்களை எப்போதும் கைவிடக் கூடாது’ என்று மறைமுகமாகச் சாடினார்.

மேலும் அவர், ‘இளம் தொழில்முனைவோர் தங்கள் விருப்பங்களை ஒருபோதும் கைவிடக் கூடாது. முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தனது சுயசரிதையில் பொறிக்கப்பட்ட பொன்னான வார்த்தைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தோற்கடிக்கப்பட்டால் அவன் வாழ்க்கை முடிவதில்லை.. ஆனால் அவன் வெளியேறும்போது அவன் முடிந்துவிடுகிறான்’ என தெரிவித்தார்.