சீமான் டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றமா என திருமுருகன் காந்தி மிக காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீலாங்கரையிலுள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகி இருக்கின்றனர்.
இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்தில். பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா?
பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா. ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.
பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.