தமிழ்நாடு சீர்மரபினர் ஆர்ப்பாட்டம் ..! உண்ணாவிரதம் என்ற பெயரில் அதிமுகவினர் நாடகம் நடத்துகின்றனர்..!

மதுரை மாவட்டம், செக்கானூரணியில், கள்ளர் பள்ளிகள் விவகாரத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு எதிராகவும், அதிமுகவினரை கண்டித்தும் தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் செக்கானூரணி தேவர் சிலை முன்பு ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிரமலைக்கள்ளர் உள்ளிட்ட 64 சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிஎன்சி சான்றிதழை மாற்றி, டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கக் கோரியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறது’’ என்றனர். பின்னர் அதிமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை, மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர். அதிமுக போராட்டம் நடத்திய பகுதி அருகிலேயே சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அவர்களுக்கு எதிராக மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதி சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.