தமிழிசை கேள்வி: அப்போ நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது வேலையில்லாமல் தான் கருத்து சொன்னீர்களா..!?

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா..!? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா… ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்…என பதிவிட்டுள்ளார்.