டொனால்ட் ட்ரம்ப் அதிரடி: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம்..!

உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவை கடந்த திங்கள் கிழமை ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்கா தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா இந்த நிதியுதவியை விரைவாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளது.