டெல்லியின் ஜி.எஸ்.டி அதிகாரியாக இருந்தவர் பபிதா ஷர்மா. இவரும், மூன்று வழக்கறிஞர்கள், இரண்டு டிரான்ஸ்போர்ட் நபர்கள் மற்றும் ஒரு நிறுவன உரிமையாளர் என அனைவரும் கூட்டு சேர்ந்து 500 போலி நிறுவனங்களை பெயரளவில் உருவாக்கி இருக்கின்றனர். இதன் மூலம், ரூ.718 கோடி மதிப்புள்ள போலி இன்வாய்ஸ்கள் கொடுத்து ரூ.54 கோடி மதிப்பிலான ஜி.எஸ்.டி ரீஃபண்ட்களைப் பெற்றிருக்கின்றனர்.
அதாவது டிரான்ஸ்போர்ட் செய்யும் இருவர் மூலம் போலி இ-வே பில்கள், பொருட்களை எடுத்துச் சென்றதற்கான ரசீதுகள் உருவாக்கி, ஜிஎஸ்டி ரீஃபண்ட் விண்ணப்பங்களை வெளியில் இருக்கும் வழக்கறிஞர்கள், நிறுவன உரிமையாளர் மூலம் விண்ணப்பித்து, அதை அப்ரூவ் செய்வதையே வழக்கமாக பபிதா ஷர்மா கொண்டிருக்கிறார். 2021 – 2022 -க்கு இடையில் ரூ.35.51 கோடி மதிப்பிலான 400 ரீஃபண்டுகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். தொடர்ந்து ஒரே அலுவலகத்துக்குள் தன் அதிகாரத்துகுட்பட்ட இடங்களில் பணி மாறுதல் பெற்றுவந்த பபிதா ஷர்மா மீது, ஜி.எஸ்.டி விஜிலென்ஸ் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
அதன் அடிப்படையில், அவர் ஒப்புதல் வழங்கிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு விசாரணைக் குழுக்களை அனுப்பியது. அப்போது இந்த ஜி.எஸ்.டி மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருப்பதாக காவல்துறை வாட் தெரிவித்திருக்கிறது.