“அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற போஸ்டர்கள் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் மற்றும் மக்களின் பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் போஸ்டர் கலாசாரம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒன்றாகும்.
அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படி, ஒரு போஸ்டர் தான் இன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.
“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகங்களுடன், வேறு எந்தக் குறிப்பும் இன்றி சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் இல்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர். அரசியல் ரீதியான போஸ்டர் தானா? அல்லது வேறு எதும் விளம்பரமா? என்றும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையே பெரியார் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வரும் நிலையில், சீமானுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.
இப்படியான சூழலில், பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளன. கட்சிக்கார்களா? அல்லது எதிர்க்கட்சியினரா? இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.