சீமான்: தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரி செலுத்துமாட்டோம் எனக் கூற வேண்டும்..!

“நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓசூரில் பேசினார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை தமிழகத்துக்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியனவற்றைக் கண்டித்து நாம்தமிழர் கட்சி சார்பில் தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை,தொகுதி சீரமைப்பு இதனால் நாடு வளர்ந்துவிடும் என்பது எல்லாம் வேடிக்கையாக உள்ளது. தேர்தலில் சீர்திருத்தம் செய்வது அதிகமான வேலையாக உள்ளது.

இந்தியா, நைஜீரியா இந்த இரு நாடுகள் தான் எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளுமே ஊழலில் மோசமான நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சிப்பை சீனா தான் தயாரித்தது. ஆனால் அந்த நாடே பயன்படுத்தவில்லை. அமெரிக்காவும் எலக்ட்ரானிக் முறையை பயன்படுத்துவதில்லை. இதனால், எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறையை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க வேண்டும். ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பதவியில் உள்ளவர் மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். இடைத்தேர்தல் முறையை நீக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவரை வெற்றி பெற்றதாக அறிவித்து மீதமுள்ள காலங்களில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது போன்ற மாற்றங்கள் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் எந்த தேசிய கட்சிகளாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள வளங்களை சுரண்டிவிட்டு நிதி தர மறுக்கின்றனர். உரிமை எனும் வரும் போது முற்றிலும் மறுத்து விடுகின்றனர்.

பேரிடர்களுக்கு நிதி வழங்கவில்லை. தமிழகம்- கர்நாடகா இரு மாநிலங்களுக்கும் இடையே நதிநீர் உரிமை பெற்றுக் கொடுப்பதிலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த பிரச்சினை இருந்தால் தான் அவர்களால் அரசியல் செய்ய முடிகிறது. பிஹார் மற்றும் ஆந்திராவில் பாஜகவுக்கு ஆதரவு தேவைப்படுவதால், அந்த மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் நிதி தரமறுக்கிறது.

இதனை மனதில் வைத்துக்கொண்டு தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. ஆனால் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரி செலுத்துமாட்டோம் என கூற வேண்டும் என சீமான் தெரிவித்தார்.