சிங்கப்பூரில் இருந்து வந்தது ரமணியை கல்யாணம் செஞ்சுக்க தான் ..! காதலி இல்லாமல் வாழ்வா..!?

உயிருக்கு உயிராக காதலித்த காதலி இல்லாமல் வாழ்க்கையா? நானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன். ஆனால் அதற்குள் காவல்துறையினர் என்னை பிடித்து விட்டார்கள்” என மதன்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னைமனை பகுதியை சேர்ந்த முத்து -ராணி தம்பதியின் மகள் ரமணி. மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரமணிக்கு கடந்த ஜூன் மாதம் தற்காலிக தமிழ் ஆசிரியையாக வேலை கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் முதல் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி ரமணி வந்துள்ளார்.

இதனிடையே ரமணியின் சொந்த ஊரான சின்னைமனை பகுதியை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகன் மதன்குமார். இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகள் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி மீன்பிடி தொழில் செய்து வந்து வந்துள்ளார். ரமணிக்கும், மதன்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இது பின்னாளில் காதலமாக மாறி இருவரும் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் மதன்குமாரின் பெற்றோர் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் மதன்குமார் தனது பெற்றோரிடம் தான் ரமணியை காதலித்து வரும் தகவலை தெரிவித்து, திருமணத்திற்காக ரமணியை பெண் கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் கேட்டு ரமணி வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் கொடுக்க விருப்பமில்லை என்றும், வேறு பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் கூறினார்கள்.

அதன்பிறகு ரமணியும், மதன்குமாரிடம் பேசுவதை தவிர்த்து விட்ட நிலையில், மதன்குமார் பலமுறை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினாராம். அப்படித்தான் இரண்டு நாள் முன்பு மீண்டும் ரமணியை சந்தித்து பேசிய மதன்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது அவரை ரமணி கடுமையாக திட்டியதுடன் தன்னிடம் இனிமேல் பேச வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதன்குமார், தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி தொடங்கியதும் ஆசிரியர்கள் சிலர் பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்று விட்டனர். மதன்குமார் ஓய்வு அறையில் இருந்த ரமணியை சந்தித்து மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார்.

ஆனால் ரமணி பிடிவாதமாக உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த மதன்குமார் மீன்வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்தில் சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை பட்டுக்கோட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

முன்னதாக சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரமணியும் நானும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக பேசி பழகி வந்தோம். நான் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு போய்விட்டேன். ரமணியும் நானும் காதலித்து வந்ததால் ஊருக்கு வந்து அவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என முடிவு செய்து நாடு திரும்பினேன். சொந்த ஊர் வந்த உடன் மீன்பிடிக்கும் வேலை செய்தேன். மற்ற சமயங்களில் எலக்ட்ரீசியன் வேலைக்கும் சென்று வந்தேன் இந்த நிலையில் ரமணி படித்து அவருக்கு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியை வேலை கிடைத்தது.

ஆனாலும் எப்போதும் போல் நாங்கள் பேசி, பழகி வந்தோம். இந்நிலையில் எனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்க்க தொடங்கினார்கள். அப்போது நான் ரமணியை காதலிப்பது பற்றி என் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் ரமணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு ரமணியை எனக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை என்று கூறினார்கள். இருப்பினும் ரமணியிடம் பேசி நமது திருமணத்திற்கு உனது பெற்றோரிடம் பேசி எப்படியாவது சம்மதம் வாங்கு என தெரிவித்தேன்.

ஆனால் ரமணியின் குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு ரமணியை எனக்கு திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை என்பதால் ரமணியின் பெற்றோரிடம் என்னைப்பற்றி தவறாக கூறினார்கள். தொடர்ந்து ரமணியின் பெற்றோர், எனது பெற்றோரை அழைத்து இருவருக்கும் ஜாதக பொருத்தம் சரியில்லை. எனவே எங்கள் மகளை உங்கள் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது. இனி பெண் கேட்டு எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று திட்டவட்டமாக கூறினார்கள். எனினும் விடாத நான், ரமணியிடம் தொடர்ந்து பேசி அவரை எப்படியும் திருமணம் செய்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் பெற்றோர் ஜாதகம் சரியில்லை என்று கூறி நிராகரித்த பின்னர், ரமணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது..

என்னிடம் பேசுவதையும் அவர் தவிர்த்து வந்தார். உயிருக்கு உயிராக காதலித்த ரமணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதே நேரத்தில் ரமணி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. இதனால் எனக்கு கிடைக்காத ரமணி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்து அவரை கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் இறுதியாக அவரிடம் பேசிப்பார்க்கலாம் என்று பள்ளிக்கு சென்று பேசினேன்.

ஆனால் அப்போதும் அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என பிடிவாதமாக கூறியதுடன், என்னை உடனடியாக வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமணியை குத்திக்கொன்றேன். நானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன். ஆனால் அதற்குள் காவல்துறையினர் என்னை பிடித்து விட்டார்கள்” என மதன்குமார் தனது வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.