சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த நோட்டீஸ்

தடையை மீறி 2013-க்கு பிறகு சட்டவிரோதமாக தாது மணல் எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சு ஆகிய மாவட்டங்களில் தாது மணலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய செயலாளர் ககந்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுக்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சு ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன. இதனை அடுத்து முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி வரை ஆய்வு நடந்தபிறகு அதன் அறிக்கை சமர்பிக்கப்பட்ட்டது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தாதுமணல் ஆலைகள் மூடப்பட்டன. இந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாத நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனுமங்களை எடுத்த கார்னெட், இல்மனைட், வி.வி. மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி உரிமைத் தொகை செலுத்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 முதல் 2014 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாகவும், அதற்கான ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.