கருணாஸ் பேச்சு: பாலியல் குற்றங்கள் கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது..!

சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறதுஎன முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களாக பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதன் காரணமாக தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரி வர கவனிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கருணாஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, எனது பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற வந்தேன். இந்த பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிவகாசியில் வரும் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடந்து சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை முறைதான். செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பால் தவறான விஷயங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தும் போது, அதனை பார்த்து மற்றவர்கள் அதே தவறை செய்கிறார்கள். இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கிறது என்பதே எனது கருத்து. ஆகவே, அப்படி நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என கருணாஸ் தெரிவித்தார்.