தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அ.தி.மு.க புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.