ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.
இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.
அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பலரும் இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் என்ன ஆளுங்கட்சியா? எங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் அமித் ஷாவிடம் பல்வேறு பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதேபோல் உருட்டல், மிரட்டல் விடுப்பதற்கு நாங்கள் என்ன ஆளுங்கட்சியாகவா இருக்கிறோம். டாஸ்மாக் ஊழல் செய்தது யார்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.
அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில்தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். திமுகவை தவிர்த்து வேறு கட்சியும் எதிரி கிடையாது. அதனால் தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை எங்களுடன் இணைத்து கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.