ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக தலைமையில் சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பணத்திற்காக பதவிக்காக கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த வாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என்று அறிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் இப்படி அறிவித்தது பேசு பொருளாகியது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.
இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. “அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.