தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னாள் அமைச்சர்களான KP முனுசாமி, SP வேலுமணி, CV சண்முகம், M தம்பிதுரை MP ஆகியோரின் டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்த வைத்தது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி அணியை சென்னை விமான நிலையத்தில் பார்த்த அடுத்த நொடியில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியதில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வுகளையும் கேமராக்கள் வட்டமிட தொடங்கியது. ஆகையால், இந்த கேமராவின் மூன்றாவது கண்களுக்கு பயந்து சில கார்கள் மாறி மாறி செல்லவேண்டுய சூழ்நிலை ஏற்படாது. எப்படியோ ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அமித் ஷாவை தனியே 50 நிமிடம் சந்தித்து பேசியது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அணி அமித் ஷாவை நடத்திய சந்திப்பை வைத்து அதிமுகவைவும், எடப்பாடி பழனிச்சாமியையும் சமூக வலைத்தளங்களில் பங்கமாய் கலாய்க்க தொடங்கினர். தமிழக சட்டசபையிலும் இது எதிரொலிக்க தொடங்கியது. இந்நிலையில், தமிழக சட்டசபை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சிறப்பு திட்டங்கள் மீதான விவாதத்தின் போது, கடந்த 2022 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டம் முடிவடைந்து, அமைச்சர்கள், MLA -க்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் கார்கள் தயாராக இருந்தபோது ஆங்கில தொலைக்காட்சி நிரூபர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக சென்று அங்கு நின்ற சாம்பல் நிற காரில் ஏற கதவை திறக்க அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர் ஒருவர், சார் இது உங்கள் கார் இல்லை என சொன்னது சுதாரித்துக் கொண்டு பின்னர் அதற்கு முன்னால் நின்றிருந்த அதே நிற காரில் ஏறி எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
அதன் பின்புதான் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், உதயநிதி ஸ்டாலினின் கார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அன்று தமிழக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எனது காரில் தவறுதலாக ஏற சென்றார். எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும், ஆனால் ரூட் மாறி கமலாலயத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ. பன்னீர்செல்வம், நாங்கள் ரூட் மாறி செல்ல மாட்டோம் என தெரிவித்தார். அந்த நிகழ்வை இன்று சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் , அன்று ரூட் மாறாதுனு சொன்னீங்களே இன்று 3 கார்களில் மாறி மாறி அமித் ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே என விமர்சனம் செய்த அடுத்த நொடியே தமிழக சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்து போனது.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.. என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,அதிமுக சார்பில், புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். அந்த அலுவலகத்தைப் பார்வையிடவே சென்றதாக எடப்பாடி பழனிசாமி ஒற்றை வரியில் பதிலளித்தார்.
மேலும், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதில் பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஒழிப்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.
1954-ஆம் ஆண்டில் மே 12 -ந் தேதி சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் எனும் ஊரில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் கருப்ப கவுண்டர், தவசியம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக பழனிசாமி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல் இளமறிவியல் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிப்பு முடித்த பிறகு, வெல்ல கமிஷன் வியாபாரத்தில் பழனிசாமி ஈடுபட்டார். ஆனால், அரசியல் ஆர்வம் அவரை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்க எம்.ஜி.ஆரின் மீதுள்ள தீவிர பற்றின் காரணமாக முன்னாள் செங்கோட்டையன் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிருக்கு அழைத்து வந்தார்.
1974-ஆம் ஆண்டு கோணேரிப்பட்டி கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பழனிசாமி 1983-ஆம் ஆண்டு ஒன்றிய இணை செயலாளரானார். 1987 -ல் MGR மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இத்தனை தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான சேவல் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு பழனிசாமி கிடைத்தது. அதில் வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்த சாதாரண பழனிசாமி அன்று முதல் எடப்பாடி பழனிசாமி மாறினார்.
அதன்பின்னர் 1990-ஆம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆனார். மேலும், 1991-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்கு இரண்டாவது முறையாக நுழைந்தார். அதனை தொடர்ந்து, 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் , 1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் , 2001-ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர் , 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகளுக்கு படிப்படியாக உயர்ந்தார்.
ஆனால் 1996 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வி அடைந்தார். மேலும் 1999-ஆம் ஆண்டு, 2004-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி என வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக சந்தித்தார். தோல்விகளால் துவழாத எடப்பாடி பழனிசாமி முன்னைவிட வேகமாக கட்சிப்பணியில் ஈடுபட்டார்.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மூன்றாவது முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் 2014-ஆம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும், தலைமை நிலைய செயலாளரானார். மேலும் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், அதிமுகவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடம்பெற்றது மட்டுமின்றி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார்.
ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வி.கே. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இவர்களை ஏதோதோ செய்ய தூண்டியது. அதன் விளைவு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி வி.கே. சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வி.கே. சசிகலா அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா சிறை செல்ல கூடும் அதனை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்கும் என்ற அரசியல் கூட்டல் கழித்தல் கணக்குகளை தற்காலிக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டார். இதனைத் தொடர்ந்து வி. கே. சசிகலா சிறைக்கு செல்வத்திற்குள் முதலமைச்சராக பதவியில் அமர்த்தும் பணி தீவிரம் அடைந்தபோது 2017 பிப்ரவரி 5-ந் தேதி ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். அன்றே அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க ஆளுநர் மாளிகை சென்றபோது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கும் நிலையில் வி. கே. சசிகலா அப்பதவியை ஏற்க முடியாத நிலை நேரிட்டது.
இத்தனை தொடர்ந்து வி. கே. சசிகலா சிறைக்கு செய்வதற்கு முன் ஓ. பன்னீர்செல்வம் தவிர்த்து புதிய முதலமைச்சர் தேர்வு செய்யும் பணியில் இறங்க வி. கே. சசிகலா பார்வை கொங்கு மண்டலம் பக்கம் திரும்பியது. இதனைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் 2017 பிப்ரவரி 7-ந் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் தான் கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை அளித்ததாக தெரிவித்தார். இந்த செய்தியை கேட்டு கோபமடைந்த வி. கே. சசிகலா அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தார்.
மேலும் வி. கே. சசிகலா சிறைக்கு செய்வதற்கு முன் அதிமுகவை வழிநடத்தத் தன் அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும் நியமனம் செய்த செய்தி ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு அமைச்சர் உள்ளிட்ட 07 சட்டமன்ற உறுப்பினர்கள், 08 மக்களவை உறுப்பினர்கள், 02 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேருடன் தர்மயுத்தம் நடத்தினார். அதனால், வி. கே. சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் என இரு அணிகளாக அதிமுக மீண்டும் பிளவுபட்டது.
இதுமட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வம் அணி மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தான் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் இறங்கினார். 234 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக 117 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பெருபான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் கர்நாடக பாணியில் அதிமுகவின் அனைத்து சட்டமனற உறுப்பினர்களையும் கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தனர். அதாவது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏறுவதை தடுத்து நிறுத்த எவ்வளவோ சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் இவற்றை எல்லாவற்றையும் கடந்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி 30 அமைச்சர்களுடன் தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.
எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாள் முதல் அதிமுக அரசை கவிழ்க்க கட்சிக்குள்ளேயேயும் வெளியேயும் பல உள்ளடி வேலைகள் நடந்தாலும் அத்தனை சதித்திட்டங்களையும் தனது ராஜ தந்திரத்தினால் வீழ்த்தினார். புரட்சி தலைவி ஜெயலலிதா சொல்வதைப்போல அதிமுக என்னும் எஃகு கோட்டை இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அனைத்து தடைக்கற்களை எடப்பாடி பழனிசாமி தகர்த்தெறிய தொடங்கினார்.
இதன் ஒரு முயற்சியாக 2017 செப்டம்பரில் கூடிய அதிமுக பொதுக்குழுவில், வி.கே. சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் டிடிவி தினகரன் தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவால் டிடிவி தினகரன் தரப்பு 19 பேரை தகுதி நீக்கம் செய்யப்போவதாக விளக்கம் கேட்டு சபாநாயகர் பி. தனபால் கடிதம் அனுப்பினார். அதில் எஸ்.டி.கே. ஜக்கையன் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரைத் தவிர்த்து 18 பேரையும் சபாநாயகர் பி. தனபால் தகுதி நீக்கம் செய்தார். டிடிவி தினகரனை சமாளிக்க ஒரு புறம் வெளியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களை உள்ளே கொண்டுவந்து ‘இரட்டைத் தலைமை’ முறை கொண்டு வந்தார்.
புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி இதோ இப்ப முடிவிற்கு வரப்போகிறது அப்ப வரப்போகிறது என்று காத்திருந்த விரோதிகள் கண்களில் மண்ணை தூவி மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக இருந்து எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தந்திரத்தினால் கடைசி வரை அதிமுகவை அசைக்க முடியாமல் போனது. அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆட்சியை பறிகொடுத்து.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்ததால் இனிமேல் பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவெடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்தது . மேலும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பாஜகாவுடன் இணக்கமாக இருந்துகொண்டு இடையிடையே குடைச்சல்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த குடைச்சல்கலிருந்து அதிமுகவை மீட்டெடுக்க இரட்டைத் தலைமைக்கு முடிவு கட்டி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், எதைப்பற்றியும் கவலைபடாமல் அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி சந்தித்தது. அதே போல பாஜக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியக்கும் தோல்விமட்டுமே மிச்சமானது. மேலும் தனித்து போட்டியிட்டால் திமுக கூட்டணி வீழ்த்த முடியாது எனவே பிரிந்து கிடைக்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற வார்த்தையை பாஜக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் வாயிலிருந்து வரவைத்தார்.
மேலும், S.P. வேலுமணி, செங்கோட்டையனுடன் விரிசல் என்ற மாயையை உருவாக்கியது மட்டுமல்லாமல் பாஜகவின் மேலிடமும் அனைவரும் ஒன்றிணைந்தால் 2026- ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பில் அண்ணாமலையை தமிழக பாஜகவிலிருந்து நீக்கினால் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வர தயார் என சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினார்.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி விரைந்தார். அதற்கு முன்பு வரை தாம் தூம் என்று எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அண்ணாமலையின் குரல் வலையை எடப்பாடியின் சதுரங்க வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாகியது. அதாவது MGR மற்றும் ஜெயலலிதா பாணியில் திமுக எதிர்ப்பு ஒன்றே பிரதான கொள்கையாக கொண்டு 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக விழ்த்துவதே குறிக்கோள் என்ற ஒற்றை மந்திரத்தில் நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது… என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல எடப்பாடி பழனிசாமி தனது சதுரங்க வேட்டை ஆரம்பித்துள்ளார்.