ஆர்.பி.உதயகுமார்: டேக் இட் ஈஸி…! கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது..!

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். எனவே, இதை “டேக் இட் ஈஸியாக” எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 11-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தற்போது திருநெல்வேலி, கும்பகோணம்,மதுரை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இந்த கலாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதல் மற்றும் கும்பகோணத்தில் நிர்வாகிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மதுரையிலும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை திருமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை இரவு கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் எம்எல்ஏ, ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார். அப்போது, “234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவின் பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் கள ஆய்வு நடைபெறுகிறது. உறுப்பினர் சீட்டு முழுமையாக சென்றடைந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஒன்பது பேர் கொண்ட குழுவாக வாக்குச்சாவடி கிளை கழகம் அமைக்க வேண்டும் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை போல ஜெயலலிதாவின் நூற்றாண்டு விழாவையும் முதல்வராக அவர் நடத்தக்கூடிய காலம் வரும். திமுகவில், வாய் பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. அந்த கட்சியில் அப்பா அல்லது மகன் மட்டும்தான் பேசுவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதிமுக தனது கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ளோம்.

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை டேக் இட் ஈஸி-ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அனைவரையும் வேலை இல்லை என்று தான் பேசுகிறார். அவருக்கு தான் வேலை இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் தான் அவருக்கு எல்லாம் புரியும். அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் பரிசை அவருக்கு அளிப்போம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.