அண்ணாமலை: 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா , வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், எல்லோருக்குமான கல்வி திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஐசிடி பாடத்திட்டம் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐசிடி அறிவியல் பாடத்தில் ஒரேயொரு சேப்டராக கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மிகப்பெரிய திட்டத்தில் குளறுபடி செய்துவிட்டு, நாங்கள் செய்வது சரி என்று தமிழக அரசு பேசிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதேபோல் பாஜகவை பொறுத்தவரை தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்திருக்கிறார்.
இதனை நான் தேர்தல் களத்தில் எதிர்கொள்வேன். 2026-ல் திமுகவின் அரசியல் பாரம்பரியத்தில் கடைசியாக ஆட்சியில் இருந்த நாளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் தாமரை வேஷத்தில் மட்டுமே இருக்கிறோம். தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் இலக்கு பாஜகவின் வளர்ச்சி மட்டும்தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், காலம் இருக்கிறது.
2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.