பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. ஏற்கனவே பாமக மூத்த தலைவர் ஜிகே மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் விஜய் விகாஸ் இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தினார். அப்போது அண்ணாமலைக்கு எழுந்துநின்று கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.
இதனால் 2021 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி போல் மீண்டும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில், திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது என்று அறிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.
பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை ஒவ்வொரு பாஜக தொண்டனும், தலைவனும் உருவாக்கி இருக்கிறார்கள். இதனை நினைத்து பெருமை கொள்கிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம்.
நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களின் நோக்கம் பாஜகவை நிலை நிறுத்துவதுதான். கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் பேசினார்கள். அதனை கடந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசுவதை பாருங்கள். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பாக பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றி சரியான நேரத்தில் பேசுவோம்.
பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேசிய கட்சி அப்படி பயணிக்க முடியாது. எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.